ஏன் இன்னொரு ஏபிடி வில்லியர்ஸ் சாத்தியமில்லை?

நேர்த்தி குறையாமல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் பதித்த முத்திரையை இன்னொருவர் கற்பனை செய்து பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே.

Feb 17, 2024 - 14:04
ஏன் இன்னொரு ஏபிடி வில்லியர்ஸ் சாத்தியமில்லை?

கிரிக்கெட்டில் இன்னொரு பிராட்மேன் சாத்தியமா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக விடை தெரியாமல் உள்ளது. அதைப் போல இனி இன்னொரு ஏபி டிவில்லியர்ஸ் சாத்தியமா? என்பதும் கிட்டத்தட்ட இன்னொரு கேள்விக்குறி தான். 

கிரிக்கெட் கடவுள் டான் பிராட்மேனுடன் டிவில்லியர்ஸை ஒப்பிடுவது கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாகத் தெரியலாம். இருவருடைய காலங்களும் ஆட்டப் பாணிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. பிராட்மேன் சுதந்திரத்துடன் கூடிய ஒரு நடைமுறைவாத பேட்ஸ்மேன். ஏபி டிவில்லியர்ஸ் அடிப்படையில் நடைமுறைவாத பேட்ஸ்ஸ்மேன்; ஆனால் வெளிப்பாட்டில் கற்பனைக்கு எட்ட முடியாத சுதந்திரத்தை கொண்டிருந்தவர். இருவரையும் ஒன்றிணைக்கும் பாலம் ஒன்றுள்ளது: மேதமை. ஆனால் அதன் மர்மப் பக்கத்தை மட்டும் இதுவரை யாராலும் முழுமையாக எட்டிப் பார்க்க முடியவில்லை.

உலக சராசரி 50 என இருந்த காலத்தில் எப்படி 99.94 சராசரியில் பிராட்மேன் ரன்களைக் குவித்தார்? ஒரு வடிவத்தில் உச்சம் தொடவே பிற பேட்ஸ்மேன்கள் தடுமாறும் காலத்தில் எப்படி டிவில்லியர்ஸ் அனைத்து வடிவங்களுக்குமான வீரராக மாறினார்? இருவரும் ஏன் மனிதக் கற்பனைக்கு எட்ட முடியாத மட்டையாளர்களாக இருக்கிறார்கள்?

இன்னொரு பிராட்மேன் சாத்தியமா என்பது தொடர்பாக 20 வருடங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு ஏ.எல். ஷில்லிங்லா (A.L. Shillinglaw) எழுதிய புத்தகம் Bradman Revisitted. பிராட்மேனின் பேட்டிங் முறைமையை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அதற்கு அவர் இட்ட பெயர்தான் Rotary method. பிராட்மேனின் முழு தொழில்நுட்பமும் அன்றைக்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பேட்டிங் பாணியிலிருந்து மாறுபட்டிருந்தது. The straight bat என்பது பின் விக்டோரிய மற்றும் எட்வார்டிய காலகட்டத்தின் எழுதப்படாத விதி. இங்கிலாந்தின் ஜாக் ஹாப்ஸ், இந்தக் காலகட்டத்தின் பிரதிநிதி. The straight bat: மட்டை நேர்கோட்டில் ஸ்டம்புகளுக்கு மேல் சென்று முன்னகர வேண்டும். ஒரு பெண்டுலம் போல. பிராட்மேனின் பேட்டோ gully திசையில் இருந்து கீழிறங்கும். இன்னொரு எழுதப்படாத விதி, மட்டை வலதுகாலின் பின்புறத்தில் இருக்க வேண்டும். ஆனால் பிராட்மேனின் பேட், இரண்டு கால்களுக்கு இடையில் நடு நாயகமாக இருக்கும். இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் விஷயம் அதுவல்ல. எப்படி பிராட்மேன் தனக்கென ஒரு மட்டைத் தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டார்? தேவையின் பொருட்டு. இதைத்தான் Rotary method என்கிறார் ஷில்லிங்லா.

தேவையின் பொருட்டு பிராட்மேன் சுயம்புவாகக் கைக்கொண்ட தொழில்நுட்பம்தான் அவரை மேதையாக உருமாற்றியது. சிறு வயதில் நண்பர்களின் அண்மை இல்லாமல் தனித்து விடப்பட்ட பிராட்மேன், தன்னுடைய பொழுதுபோக்கிற்கு உருவாக்கியதுதான் தண்ணீர் தொட்டி கிரிக்கெட். கோல்ஃப் பந்தைத் தண்ணீர் தொட்டி மீது எறிந்து பின்னர் அதை ஸ்டம்ப் கொண்டு அடித்தாடுவது அவருடைய பயிற்சி முறை. தாறுமாறாக எகிறி வரும் கோல்ஃப் பந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த அவர் தனக்கென ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டார். ஒற்றை ஸ்டம்ப் கொண்டு ஆடிப் பழகியதால் கவனமும் பந்தின் மீதான அவருடைய விழிப்புணர்வும் கூடியது. பந்து உபயோகப்படுத்தப்படும் எல்லா விளையாட்டுகளிலும் பிராட்மேன் உச்சத்தைத் தொட்டிருப்பார் என்கிறார் ஜெஃப்ரி பாய்காட். இதன் மூலம் Rotary method என்பது எந்தவொரு வகைமைக்கும் உட்படாதது என்பதுடன் தனிப்பட்ட பேட்ஸ்மேன் ஒருவரின் வசதியைப் பொறுத்தது என்பது தெளிவாகிறது.

பிராட்மேனுக்குப் பிறகு பல பேட்ஸ்மேன்கள் rotary method-ஐப் பின்பற்றி வெற்றி கண்டுள்ளனர். விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன் எனப் பலரை உதாரணமாக சொல்லலாம். ஆனால் ஒருவராலும் பிராட்மேனின் சராசரியை - 99.94 நெருங்க முடியவில்லை. குறைந்தபட்சம் 75ஐக் கூடத் தொட முடியவில்லை. காரணம் இவர்கள் முழுவதுமாக rotary method-ஐக் கைகொள்ளவில்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட hybrid பாணியைக் கைகொள்கின்றனர் என்கிறார் ஷில்லிங்லா. நடைமுறைகளைப் பின்பற்றுவதில் பயிற்சியாளர்கள் கொண்டுள்ள அதீத இறுக்கம் இதற்கு ஒரு காரணம். பயிற்சியாளர்கள் வசம் முழுவதும் தம்மை ஒப்புக்கொடுக்காமல் தப்பித்துக்கொள்ளும் திறமைசாலிகள் நட்சத்திரங்களாக மாறுகின்றனர். 

பிராட்மேனுக்கு பிறகு Rotary method-ஐ சரியாகப் பயன்படுத்திய ஒரே பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் தான். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இருவரும் மாறுபட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒரு சில உள்ளார்ந்த அம்சங்கள் இருவருக்கும் ஒத்துப்போவதைப் பார்க்க முடியும். இருவரும் கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளில் விற்பன்னர்கள். டிவில்லியர்ஸ் rotary method-ஐத் தன்னை அறியாமல் வரித்துக்கொண்ட ரகசியம் இதுதான். டிவில்லியர்ஸ் ஆட்டத்தில் தென்படுவது வெறுமனே கிரிக்கெட் மட்டுமல்ல. அதில் ரக்பி, டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட ஆட்டங்களின் நுட்பங்கள் ஒத்திசைந்துள்ளன. பிராட்மேனின் தனித்துவமான காலாட்டம் இசையின் நுட்பங்களை உள்வாங்கிக் கட்டப்பட்டது என்கிறார் நியூசிலாந்து கிரிக்கெட் மேதை மார்ட்டின் குரோ.

இருவருடைய பேட்டிங்கிலும் Trigger movement என்ற ஒரு அம்சமே கிடையாது. பந்து வீச்சாளரின் கையிலிருந்து பந்து புறப்படும்வரை கிட்டத்தட்ட சிலைதான். தலை சாயாமல் இருப்பதற்கும் காலாட்டத்திற்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்தவர்கள் இவர்கள்.

பிராட்மேனின் முறைமைகள் இனி வரும் காலத்தில் உள்வாங்கப்படலாம். ஆனால் 99.94 என்ற அவருடைய சராசரியை ஒருவர் எட்டிப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். டிவில்லியர்ஸ் களத்தில் நிகழ்த்திக் காட்டிய சாகசங்களை இன்னொரு வீரர் முறியடிக்கலாம். ஆனால் நேர்த்தி குறையாமல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் பதித்த முத்திரையை இன்னொருவர் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டி வில்லியர்ஸ்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow