விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை-அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக சம்மன்
வருகிற 19-ம் தேதி ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 6வது முறையாக சம்மன் அனுப்பியிருக்கிறது.
டெல்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தன. வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் படி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இதுவரை 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், தம் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், எத்தனை முறை சம்மன் அனுப்பினாலும் ஆஜராக மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
தம்மை கைதுசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டும் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையில், தற்போது 6-வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. வருகிற 19-ம் தேதி ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை சம்மனுக்கு, கெஜ்ரிவால் ஆஜராவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?