சீமான் வழக்கில் ஆஜராகாத விஜயலட்சுமி... அவகாசம் வழங்கிய நீதிமன்றம்...

Mar 19, 2024 - 18:03
சீமான் வழக்கில் ஆஜராகாத விஜயலட்சுமி... அவகாசம் வழங்கிய நீதிமன்றம்...

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி  ஆஜராகாததால், ஏப்ரல் 2 ம் தேதி ஆஜராக அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் அளித்ததால், போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, புகார்தாரரான நடிகை விஜயலட்சுமியை இன்று (மார்ச் 19) ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்ததது. அப்போது, காவல்துறை தரப்பில், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, விஜயலட்சுமி ஆஜராக மேலும் அவகாசம் வழங்குவதாகக் கூறி, விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் நேரில் ஆஜராக முடியாவிட்டால், காணொளி காட்சி மூலமாக ஆஜராகலாம் எனவும் அனுமதியளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow