சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்களம் : டெல்லி முகாமிட்டுள்ள நயினார், செல்வபெருந்தகை 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி குழப்பங்களை இறுதி செய்ய நயினார் நாகேந்திரன், செல்வபெருந்தகை ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். 

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்களம் : டெல்லி முகாமிட்டுள்ள நயினார், செல்வபெருந்தகை 
Tamil Nadu's Nayinar, Selva Perundakai camped in Delhi

அமித்ஷாவுடன் நயினார் சந்திப்பு 

கடந்த வாரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திடீர் பயணமாக டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித் ஷாவிடம் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெறப்பட்ட வாக்குச் சதவீதம் அடிப்படையில் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பட்டியலில் வேளச்சேரி, திநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், குமரி, நெல்லை, கிள்ளியூர், நாகர்கோவில், விளவங்கோடு உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வருகின்ற ஜனவரி மாதம் தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளும் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 பேர் கொண்ட குழு 

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி 3 பேர் கொண்ட குழுவை பாஜ அமைத்து உள்ளது. பாஜக பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தவெக கூட்டணி: டெல்லியில் செல்வபெருந்தகை

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர்கள் கிரிஸ்சோடங்கர், சூரஜ் ஹெக்டே, ஆலுவா ஆகியோர் இன்று கூடி ஆலோசித்தனர்.

இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்துள்ளார்கள். அப்போது 40 தொகுதிகள் கேட்டு வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரசுக்கு எத்தனை தொகுதி 

இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தல் முன் தயாரிப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதித்தோம். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதே எங்கள் இலக்கு.

டெல்லியில் நாளை (செவ்வாய்)யும் தொடர்ந்து ஆலோசிக்க இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow