ஈரான் சிறைபிடித்த சரக்கு கப்பலில் சிக்கி தவிக்கும் 17 இந்தியர்கள்... மீட்பு நடவடிக்கையில் இந்தியா தீவிரம்

ஈரான் - இஸ்ரேல் இடையே கடும் மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில் ஈரானால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Apr 16, 2024 - 08:44
ஈரான் சிறைபிடித்த சரக்கு கப்பலில் சிக்கி தவிக்கும் 17 இந்தியர்கள்... மீட்பு நடவடிக்கையில் இந்தியா தீவிரம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ட்ரோன் தாக்குதலை அடுத்து இரு நாடுகளிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 13 ஆம் தேதி இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஓமன் வளைகுடா அருகில் ஹாா்முஸ் நீரிணையையொட்டி, சென்று கொண்டிருந்து போது இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர் சிறைப்பிடித்து தங்களது எல்லைக்குள் கொண்டு சென்றனர். அந்த கப்பலில் 25 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்றும் தகவல்கள் வெளியானது. 

இதையடுத்து அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசையன் அமீர் அப்துல்லாஹியனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 14-ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எம்எஸ்சி ஏரீஸ் கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களையும் உடனடியாக விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதையடுத்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசையன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஈரான் எல்லையில் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் கப்பலின் விவரங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இந்திய அரசின் பிரதிநிதிகள் கப்பலின் பணியாளர்களை சந்திக்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். 

இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர்,  ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை இந்தியா விரும்பவில்லை என்று தெரிவித்தார். இந்தப் பிரச்னை தீவிரமடையக் கூடாது என்று இரு நாடுகளையும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு கோடி இந்தியா்கள் வசிக்கிறாா்கள். எனவே, அப்பகுதியில் அமைதி காணப்படுவது முக்கியம். இந்தியாவின் பெரும்பாலான கப்பல்கள் இப்பகுதியைக் கடந்து செல்கின்றன. இப்பகுதியில் இருந்துதான் நமக்கு எண்ணெய் வருகிறது. இப்பகுதி உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் இடையிலான மோதலை கவலையோடு கவனித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow