Atlee: ஒரேயொரு ஹிட்... ஓஹோன்னு வாழ்க்கை... அட்லீக்காக காத்திருக்கும் பாலிவுட் ஹீரோக்கள்!!

அம்பனியின் மகன் திருமண விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார் அட்லீ. அப்போது அவரை பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Mar 3, 2024 - 13:46
Atlee: ஒரேயொரு ஹிட்... ஓஹோன்னு வாழ்க்கை... அட்லீக்காக காத்திருக்கும் பாலிவுட் ஹீரோக்கள்!!

ஜாம்நகர்: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்து விஜய்யின் அன்புத் தம்பியாக ப்ரோமோஷன் பெற்றார். ஆம்! அந்தளவிற்கு விஜய் - அட்லீ இருவரது கூட்டணியின் வைப் கோலிவுட்டையே அதிர வைத்தது. தெறியில் விஜய் ரசிகர்களை தெறிக்கவிட்ட அட்லீ, அடுத்தடுத்து மெர்சல், பிகில் என பின்னி பெடலெடுத்தார். கமர்சியல் ஹிட் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மரண மாஸ் காட்டினார் அட்லீ. ஆனாலும் காப்பி பேஸ்ட் கிங் என்ற பட்டமும் அட்லீயை துரத்திக் கொண்டே இருந்தது.

ஏற்கனவே தமிழில் ஹிட் அடித்த படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து இயக்கி வருவதில் அட்லீ கில்லாடி என, ரசிகர்கள் சீன் - பை - சீன் ஆதாரத்துடன் நிரூபித்தனர். இதற்கெல்லாம் கொஞ்சமும் அசராத அட்லீ, கோலிவுட்டில் இருந்து பாலிவுட் பறந்தார். இந்தியில் முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் இணைந்த அட்லீ, ஜவான் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி ட்ரோலர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்தார். இந்தப் படத்திலும் அட்லீயின் காப்பி, பேஸ்ட் சம்பவங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகினாலும், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரின் வாயை அடைத்துவிட்டது. ஷாருக்கானையே வேலை வாங்கி ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் இயக்குநர் என்ற பெருமையும் அட்லீயின் வசமானது.

இந்நிலையில் அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள குடும்பத்துடன் மும்பை பறந்தார் அட்லீ. அங்கே பாலிவுட்டின் டாப் ஹீரோ ரன்வீர் சிங் அட்லீயை வரவேற்ற விதம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அட்லீயை அரவணைத்துச் சென்ற அவர், “பாம்பே ஹீரோக்கள் அனைவரும் அட்லீக்காக சிலிப்பில் வெயிட்டிங்கில் நிற்கின்றனர்..” என ஜாலியாக கலாய்த்துள்ளார். அதாவது கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் செய்யும் கேட்சை பிடிக்க சிலிப்பில் ஃபீல்டர்கள் காத்திருப்பார்கள். அப்படித்தான் பாலிவுட் ஹீரோக்கள் வரிசையாக சிலிப்பில் நின்று அட்லீயை கேட்ச் பிடிக்க காத்திருப்பதாக கூற, அந்த இடமே ரகளையாகிறது.

ஜவான் இசை வெளியீட்டு விழாவின் போது விரைவில் ஹாலிவுட்டில் படம் இயக்குவேன் என அட்லீ கூறியிருந்தார். இப்போது ரன்வீர் சிங் அட்லீக்கு கொடுத்த ஹைப்பை பார்க்கும் போது நிச்சயம் அது நடக்கும் என்றே தெரிகிறது. இந்நிலையில் அட்லீயை ரன்வீர் சிங் வரவேற்ற வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஒரேயொரு படம் ஓஹோன்னு வாழ்க்கை என அட்லீயை புகழ்ந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow