பிட்நோட்டீஸ் எல்லாம் ஓல்ட் ஃபேஷன் -  கட்சி சின்னத்துடன் காண்டம் பாக்கெட் சப்ளை!! ஆந்திராவில் விசித்திர தேர்தல் பிரசாரம்...

இணையத்தில் இரு கட்சிகளும் மாறி மாறி வசைபாடியிருந்த பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

Feb 23, 2024 - 07:43
Feb 23, 2024 - 08:31
பிட்நோட்டீஸ் எல்லாம் ஓல்ட் ஃபேஷன் -  கட்சி சின்னத்துடன் காண்டம் பாக்கெட் சப்ளை!! ஆந்திராவில் விசித்திர தேர்தல் பிரசாரம்...

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிச் சின்னங்கள் அச்சடிக்கப்பட்ட காண்டம் பாக்கெட்டுகளை விநியோகித்து இரு முக்கிய கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஆந்திராவில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசும், எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும், வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

தேர்தல் பிரசாரத்திற்கு பொதுவாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு யுக்தியைக் கடைப்பிடிக்கும். ஆனால், ஆந்திராவில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் பிரசார யுக்தி பேசுபொருள் ஆகியுள்ளது.ஆந்திர மாநிலத்தில் காண்டம் பாக்கெட்டுகள் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், காண்டம் பாக்கெட்டுகளையே பிரசாரக் கருவியாக பயன்படுத்தியுள்ளன. இதற்காக ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி பெரும் செலவு செய்து காண்டம் பாக்கெட்டுகளில் தங்கள் கட்சி சின்னங்களை அச்சடித்து, அவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரிடம், ஒருவர் எதற்காக இதுபோல ஆணுறைகளைத் தருகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் நக்கலாக சொன்ன பதில் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. "பல குழந்தைகள் இருந்தால், அதிகப் பணம் விநியோகிக்கப்பட வேண்டும், அதனால்தான் இந்த ஆணுறைகள் அனைவருக்கும் தருகிறோம்" என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்கிறார். 

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் காண்டம் பாக்கெட்டுகளை விநியோகித்தாலும், இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் திட்டிக்கொள்கின்றனர். இணையத்தில் இரு கட்சிகளும் மாறி மாறி வசைபாடியிருந்த பதிவுகளும் வைரலாகி வருகின்றன. ஆந்திராவில் இரு முக்கியக் கட்சிகள், தங்கள் கட்சிச் சின்னம் அடங்கிய காண்டம் பாக்கெட்டுகளை விநியோகித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.  



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow