காசு வேண்டாம்.. பேருந்தில் பயணிக்க பிளாஸ்டிக் பாட்டில் போதும்: கவனம் ஈர்க்கும் சுரபயா

பிளாஸ்டிக் பாட்டில்களே கொடுத்தால், பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற திட்டம் சுரபயா நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Apr 24, 2025 - 16:22
காசு வேண்டாம்.. பேருந்தில் பயணிக்க பிளாஸ்டிக் பாட்டில் போதும்: கவனம் ஈர்க்கும் சுரபயா
surabaya attracts attention for a plastic bottle is enough to travel by bus

வழக்கொழிந்துபோன ‘பண்டமாற்று முறை’-க்கு இந்தோனேசிய நாட்டில் மறுபடியும் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு மிகவும் இதமான முறை இது என்பதுதான் ஹைலைட்!

இந்தோனேசியாவின் சுரபயா நகரில் 2018-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பசுமைக் காதல்’முறை இது. பொதுப் போக்குவரத்தின்பால் பெருமளவு மக்களை இதனால் ஈர்க்க முடிகிறதாம். தவிர, ‘3R’ (Reduce,Reuse,Recycle) என்ற பசுமைக் கோட்பாடும் நடைமுறையில் உள்ளது. அதாவது, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, மறுபடியும் பயன்படுத்துவது மற்றும் மறுசுழற்சி செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா ராஜதானி தலைநகராகவும், அந்த நாட்டின் அதிகப்படியான மக்கள்தொகையில் 2-வது மிகப்பெரிய நகரமாகவும் (2.88 மில்லியன்) ‘சுரபயா’ இருக்கிறது. 2017 காலகட்டத்தில் நாளொன்றுக்கு 2,166 டன்கள் குப்பைகளை உற்பத்தி செய்யும் நகரமாகவும் இது இருந்திருக்கிறது. அவற்றில் 19.4% பிளாஸ்டிக்தான். 

மக்கள் பெரும்பாலான குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டி வந்தனர். அதேசமயம், பொதுப் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துவதில் மக்களுக்கு நாட்டமில்லை. அதனால் தான் இந்தத் திட்டத்தை சுரபயா அரசு ஏற்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. 

ஒருமுறை பேருந்தில் பயணம் செய்வதற்கு 1500 மி.லி கொள்ளளவு உள்ள 3 பெரிய பிளாஸ்டிக் பாட்டில்கள் (அ) 600 மி.லி கொள்ளளவு உள்ள 5 நடுத்தர அளவு பாட்டில்கள் (அ) 300 மி.லி கொள்ளளவு உள்ள 10 சிறிய பாட்டில்கள் (அ) 10 சிறிய பிளாஸ்டிக் கோப்பைகள் (240 மி.லி) கொடுத்தாலே போதும்... பணம் கொடுக்க வேண்டியதில்லை. சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை ‘மறுசுழற்சி’ செய்யும் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்றுவிடுவதால், அரசுக்கு வருவாயும் கிடைக்கிறது.

இதனால் தனியார் வாகனங்களின் பயன்பாடு கணிசமாகக் குறைவதால், போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வருகிறது. வாகனப் புகைக்கேடு குறைகிறது. நீர்நிலைகளில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள் பெருமளவு தவிர்க்கப்படுவதால், அவை மாசடைவது தடுக்கப்படுகிறது. நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களும் இயற்கைச் சூழலும் மேம்படுகின்றன.

-ஆர்.லதா (குமுதம் சிநேகிதி-3.4.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow