ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழச் சின்னம்... அறிவித்தது தேர்தல் ஆணையம்!

இதே பலாப்பழ சின்னம், வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

Mar 30, 2024 - 18:37
Mar 30, 2024 - 18:40
ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழச் சின்னம்... அறிவித்தது தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்ற தேர்தல் பாஜக கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுகவிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கிறார். அவர் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில், அதே தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மட்டும் 6 பேர் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமது தரப்புக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுள்ளதாகக் கூறியிருந்தார். மேலும், தமக்கு ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும் என்றும், அப்படி முடக்கும் பட்சத்தில் வாளி, திராட்சைப் பழம், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். 

இந்நிலையில், அவருக்கு பலாப்பழ சின்னத்தையே ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே பலாப்பழ சின்னம், வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக அவர் போட்டியிடும் தொகுதியிலேயே மனுத்தாக்கல் செய்திருந்த மற்ற பன்னீர் செல்வங்களும் வாளி சின்னத்தைக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow