குன்னூரை குளிர்வித்த மழை... குதூகலமாகக் குளித்த எருமைமாடு
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழையில் எருமைமாடு ஒன்று ஆனந்தமாக உற்சாகத்துடன் குளியல் போட்டது.
தமிழகமெங்கும் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு மாதமாக அதிக வெயிலின் தாக்கம் காணப்பட்டது. வனப்பகுதிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து பல இடங்களில் காட்டுதீ பரவியது.
இந்நிலையில், நேற்று இரவு குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 93 எம் எம் மழை பதிவாகியுள்ளது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெப்பத்தினால் நீலகிரி மாவட்டத்தில் இரவு வேளையில் பெட்ஷீட் கம்பளிகள் தேவையில்லாத சூழ்நிலை ஏற்பட்டது.
வெப்பம் தணிந்து குளுமை பரவியதால் குன்னூர்வாசிகள் குதூகலமடைந்தனர். மக்கள் மட்டுமல்ல மாடு கூட மழையால் உற்சாகமடைந்தது. நேற்று பெய்த மழையில் வளர்ப்பு எருமை மாடு ஒன்று குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆனந்தமாக குளியல் போட்டது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரை ஆசையுடன் குடித்து ஆட்டம் போட்டது. கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் குன்னூரில் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
What's Your Reaction?