TVK Vijay: அரசியல்வாதியாக முதல் ஊக்கத்தொகை... மாணவர்களுக்கு விஜய்யின் குட்டி ஸ்டோரி என்ன?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாளை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சி குறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை: விஜய்யின் அரசியல் என்ட்ரி நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. இதுவரை மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஜய், இனி அரசியல் மட்டுமே தனது இலக்கு என முடிவெடுத்துவிட்டார். இதனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். மேலும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தவர்களிடம் நலம் விசாரித்து வந்தார்.
இதனிடையே கடந்தண்டை போல இந்த வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும் என கடந்த 10ம் தேதி அறிவித்திருந்தார். அதாவது 234 தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டு ஊக்கத் தொகை வழங்கினார் விஜய். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 234 தொகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அதேபோல், இந்தாண்டும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத் தொகை குறித்து அறிவித்த விஜய், அதனை இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என்றிருந்தார்.
இதன் முதற்கட்டமாக நாளை (ஜூன் 28) சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில், அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பற்றி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில தகவல்கள் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஊக்கத் தொகை பெறுவதற்காக சென்னை வந்துள்ள வெளிமாவட்ட மாணவ, மாணவிகளுக்கு, தங்கும் இடம், உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், மாணவர்கள், அவர்களின் பெற்றோர், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 800 மாணவர்கள் நாளை ஊக்கத் தொகை பெறவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முக்கியமாக இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் விஜய் 10 நிமிடங்கள் வரை பேசுவார் எனவும் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
கடந்தாண்டும் ஊக்கத் தொகை வழங்கிய பின்னர், பணம் வாங்காமல் ஓட்டுப் போடுங்கள் எனக் கூறிய விஜய், காமராஜர், அம்பேத்கார், பெரியார் ஆகியோர் பற்றி படியுங்கள் எனவும் மேடையில் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது தனது அரசியல் கட்சியையும் அறிவித்துவிட்டதால், முதன்முறையாக அரசியல்வாதியாக ஊக்கத் தொகை வழங்கவுள்ளார் விஜய்.
இதனால் மாணவர்கள் முன் அரசியல் பற்றி விஜய் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வழக்கமான குட்டி ஸ்டோரி ஃபார்முலாவையும் விஜய் கையில் எடுப்பார் எனத் தெரிகிறது. இரண்டாம் கட்டமாக 03.07.24 அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கவுள்ளார் விஜய்.
இதற்கிடையே விஜய் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு அளித்தார். இந்நிலையில் இந்த விழாவிற்கு உள்ளரங்கு பாதுகாப்பிற்காக ஒரு உதவி ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
What's Your Reaction?