பூத் ஏஜென்டுகளுக்கு பணம் கொடுக்கல.. பாஜக நிர்வாகிகள் மோசடி?.. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
பாஜக பூத் ஏஜென்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அக்கட்சி நிர்வாகிகளே மோசடி செய்ததாக கூறி மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது.
இந்த நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் பாஜக பூத் ஏஜென்டுகளுக்கு பணம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினரே போஸ்டர் ஒட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில், பாஜக பூஜ் ஏஜென்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜக பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி மற்றும் மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் ஆகியோர் பணமோசடி செய்ததாக அவர்கள் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. எனவே அவர்கள் 4 பேர் மீதும் பாஜக மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்ட சில மணி நேரத்திலேயே கிழிக்கப்பட்டுள்ளது. பாஜக பூத் ஏஜென்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியை பாஜக நிர்வாகிகளே மோசடி செய்ததாக குற்றம்சாட்டி போஸ்டர் ஒட்டப்பட்டதும் உடனடியாக அது கிழிக்கப்பட்டதும் மதுரையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?