சிவகங்கையில் அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டு.. மாடு முட்டி 10க்கும் மேற்பட்டோர் காயம்...
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் 10க்கும் மேற்பட்டுார் காயமடைந்தனர்.
காளையார்கோயில் அருகே புரசடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள தர்ம முனீஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
கடந்த 20ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மஞ்சுவிரட்டு போட்டி மக்களவைத் தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) மஞ்சுவிரட்டு போட்டி நடத்த கோயில் விழா கமிட்டியினர் காளையார் கோயில் காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாடுகள் சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து கொண்டு வரப்பட்ட காளைகளை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பியதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
இதில் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறி வந்தபோது மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என காயமடைந்த 10-த்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
What's Your Reaction?