அழுக்கு ட்ரெஸ்ஸோட உள்ள வரக்கூடாது.. மெட்ரோவில் விவசாயிக்கு அனுமதி மறுப்பு.. தூக்கியடிக்கப்பட்ட ஊழியர்..!
பெங்களூர் மெட்ரோவில் அழுக்கான உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மெட்ரோ ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணம் மேற்கொள்வதற்காக விவசாயி ஒருவர் கடந்த 24ஆம் தேதி வந்துள்ளார். அப்போது அவர் அழுக்கான உடை அணிந்து வந்ததாக கூறி மெட்ரோவில் பயணம் மேற்கொள்ளக் கூடாது என பாதுகாப்பு மேற்பார்வையாளர் தடுத்து நிறுத்தி உள்ளார்.
பயணச் சீட்டு எடுத்தும் விவசாயியை பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் அனுமதி மறுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சக பயணிகள், மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா? மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இதனை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிட்டார்.
பயணிகளின் கண்டனத்தை அடுத்து அந்த விவசாயிக்கு மெட்ரோவில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளான நிலையில், விவசாயியை பயணம் மேற்கொள்ள இடையூறு செய்த பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணிநீக்கம் செய்துள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ராஜாஜிநகர் மெட்ரோ விவகாரம் விசாரிக்கப்பட்டு, சமந்தப்பட்ட பாதுகாப்பு மேற்பார்வையாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணிக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
What's Your Reaction?