அச்சுறுத்தும் சிறுத்தை... அச்சத்தில் மக்கள்... 9 பள்ளிகளுக்கு விடுமுறை...
மயிலாடுதுறை அடுத்த ஆரோக்கியநாதபுரம் காட்டுப் பகுதியில் சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதால். அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆரோக்கியநாதபுரம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவல் அளித்த நிலையி, சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூரைநாடு பகுதியில் வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மயிலாடுதுறை நகரை ஒட்டிய ஆரோக்யநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப்பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட அடர்ந்த காட்டிற்குள் சிறுத்தை பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கு திருச்சி மண்டல தலைமை வனத்துறை அலுவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோமர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மயிலாடுதுறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க சென்சார் கொண்ட அதிநவீன கேமராவை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதற்காக மதுரையில் இருந்து கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரத்தில் சிறுத்தை காட்டுப்பகுதியை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளதால் அங்கு 5 கிலோமீட்டர் பரப்பளவில் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அச்சுறுத்தல் உள்ள பகுதியைச் சேர்ந்த 9 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.
What's Your Reaction?