எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இவர்கள் தான் பொறுப்பு -முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
டி.டி.வி.தினகரன் தூண்டுதலால் ஆயுதங்களுடன் வந்த அமமுகவினர் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம்.
எங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் தான் பொறுப்பு ஆவார்கள் என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மங்கல்ரேவு பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் வந்த அதிமுகவினர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் அதிமுக மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எஸ்.பி-யிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அதிமுகவினர் மீது தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது. பல இடங்களில் அதிமுகவினர் மீது ரத்தம் சொட்ட, சொட்ட தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஒரு உதயகுமார் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு லட்சம் உதயகுமார் உருவாகி அதிமுகவை வழி நடத்துவார்கள்.
அதிமுகவினரின் நாக்கை வெட்டுவோம் என சொன்னவர்கள் இன்று நாட்டிலேயே இல்லாமல் போய் உள்ளார்கள். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நான் உட்பட அதிமுக நிர்வாகிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார். மேலும், அதிமுகவுக்கு வந்த சோதனைகளை தாண்டி அதிமுகவை எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார்.
அதேப்போல் மதுரையில் அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு சதவீதம் பேர் கூட அன்றைய தினம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற அமமுக டி.டி.வி.தினகரனின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தான் உண்மை. எங்களின் உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால் எங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் தான் பொறுப்பு ஆவார்கள்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமமுக, ஒ.பி.எஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. டி.டி.வி.தினகரன் தூண்டுதலால் ஆயுதங்களுடன் வந்த அமமுகவினர் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம். அதிமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்”என்றார். மேலும் அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் புகாரின் அடிப்படையில் தாக்குதல் ஈடுபட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சேடப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?