கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாள் நெருங்குகிறது... கடும் கட்டுப்பாடுகளை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை...
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பாரம்பரிய முறைபடி தண்ணீர் பீய்ச்சி அடிக்க இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சித்திரைத் திருவிழாவின் முக்கியமான அங்கம். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி விமர்சையாக நடக்கவுள்ளது. அந்த நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி கள்ளழகரை தரிசிப்பார்கள்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பாரம்பரிய முறைபடி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளைப் பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் அணிவிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும். மேலும் திரவம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பக்தர்களும், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இது பெண்கள் குழந்தைகள் மீது ஒரு சில இளைஞர்கள் தவறுதலாக வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இதுபோன்ற துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சட்டத்தின் கடமையாக உள்ளது. எனவே இனி இந்த விவகாரம் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீச்சி அடிப்பவர்கள், மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் அதுவும் அவர்களின் முன் அனுமதி பெற்றோர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. அவர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
இந்த நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது பாரம்பரிய முறைபடி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இன்று முதல் (ஏப்ரல் 7) ஏப்ரல் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முன்பதிவு இன்று (ஏப்ரல் 7) தொடங்கியது.
What's Your Reaction?