எங்களின் எதிர்காலம் உதயநிதி வாழ்க.. மக்களவையில் எதிரொலித்த முழக்கம்… யாரெல்லாம் சொன்னாங்க
வாழ்க உதயநிதி என்று சொல்லி திமுக எம்.பிக்கள் சிலர் இன்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். எங்களின் எதிர்காலம் உதயநிதி என்று கூறியது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஜெய்ஹிந்த் என்று சொல்லி பதவி பிரமாணம் எடுத்துகொண்டனர்.
18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து முற்பகல் 11 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு லோக்சபா கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி,அமித்ஷா உள்ளிட்ட எம்.பிக்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
லோக்சபாவில் 2-வது நாளாக இன்று தமிழகம் உட்பட இதர மாநில எம்பிக்கள் பதவியேற்றனர். கடந்த முறை லோக்சபாவில் தமிழக எம்பிக்கள் பதவியேற்ற போது, பெரியார் வாழ்க- தமிழ் வாழ்க என முழங்கினர். இதற்கு ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என பதில் முழக்கம் எழுப்பியது பாஜக தரப்பு. இன்று பதவியேற்கும் போதும் தமிழக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இன்றைய தினம் தமிழ்நாட்டினை சேர்ந்த 39 எம்.பிக்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். தமிழ் வாழ்க.. தமிழ்நாடு வாழ்க என்று கூறி பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். திமுக எம்.பிக்கள் பதவி பிரமாணம் எடுத்த போது வழக்கம் போல பெரியார்… அண்ணா.. கருணாநிதி வாழ்க என்று முழக்கமிட்டனர்.
மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் வாழ்க பெரியார்… வாழ்க அண்ணா.. வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. வாழ்க உதயநிதி ஸ்டாலின் என்று சொல்லி முழக்கமிட்டார். ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோரும் எங்களின் எதிர்காலம் உதயநிதி என்று சொல்லி பதவியேற்றுக்கொண்டனர்.
திமுகவின் சீனியர் எம்பிக்களான டிஆர் பாலு, ஆ.ராசா, கனிமொழி முழக்கங்கள் எதனையும் எழுப்பவில்லை. திமுகவின் சிஎன் அண்ணாதுரை, தரணிவேந்தன் ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலு பெயரையும் சேர்த்து வாழ்க என்றனர். தென்காசி எம்பி ராணி ஶ்ரீகுமார் கனிமொழி எம்பி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் பெயரையும் குறிப்பிட்டு வாழ்க என முழக்கமிட்டார்.
விசிக எம்பி ரவிக்குமார் வாழ்க தமிழ்! வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்! வாழ்க எழுச்சித் தமிழர்! சமத்துவம்- சமூகநீதி வெல்க என முழக்கமிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஜெய் டெமாக்கரசி! ஜெய் கான்ஸ்டிடியூசன் என முழங்கினார்.தீரன் சின்னமலை காளியங்கராயன் ஆசியோடு என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் உறுதி மொழியை வாசித்தார்.
பின்னர் கோவை செழியன்- கரூர் முத்துகவுண்டர் புகழ் - ஈஸ்வரன் ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டார். திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு தனது சட்டைப் பையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை எடுத்து காட்டினார். விஜய் வசந்த் பதவியேற்ற போது தனது தாத்தா.. அப்பா பெயரை சொல்லி பதவியேற்றுக்கொண்டார் காமராஜர் புகழ் ஓங்குக என்று முழக்கமிட்டார்.
What's Your Reaction?