ராமேஸ்வரம் கஃபே குண்டு விசாரணை தீவிரம் - மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை...
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் 7 தனிப்படைகள் அமைப்பு
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கை துரிதப்படுத்த காவல் உதவி ஆணையர் நவீன் குல்கர்னி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் கடந்த 1ம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். ரவா இட்லி வாங்கச் சென்ற ஒரு நபர் கடையில் பையை வைத்துச் சென்றதாகவும், அவர் வெளியேறிய ஒரு மணி நேரத்தில் 10 நொடிகள் இடைவெளியில் இரு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல் வெளியானது. பையில் வைத்து வெடிகுண்டு எடுத்துச் சென்றதாக கூறப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பெங்களூர் ஹெச்.எல். போலீசார் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
ஒருபுறம் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு காரணம் யார்?, பின்னணியில் பயங்கரவாதிகள் அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் ஓட்டலில் வெடிகுண்டை வைத்து விட்டு சென்ற நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என மூன்று மாநிலங்களிலும் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த காவல் உதவி ஆணையர் நவீன் குல்கர்னி தலைமையில் 7 குழுக்களை அமைத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த 7 குழுக்களுக்கும் 7 விதமான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு உட்பட்ட செல்போன் டவரில் வந்த அழைப்புகளை ஆராய்வதற்கு ஒருகுழுவும், சிசிடிவி காட்சியில் பதிவான சந்தேகத்திற்குறிய நபர் குறித்து தேடுவதற்கு ஒருகுழுவும் செயல்படும். மூன்றாவது குழு மங்களூரு குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சம்பவமா என ஆராயும். நான்காவது குழு இச்சம்பவம் தொழிற்போட்டி காரணமாக நடைபெற்றதா என விசாரணை நடத்தும். சந்தேகத்திற்குறிய நபர் தப்பி செல்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கான வழிகள், உபா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ளவர்களிடம் விசாரணை என பிற குழுக்கள் தங்கள் பணிகளைத் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?