வராதே… வராதே… ஓட்டு கேட்டு வராதே… அமைச்சருக்கு கருப்பு கொடி…

தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளருக்கு எதிராக அப்பகுதி மக்கள் கருப்பு கொடி ஏந்தி, வராதே.. வராதே என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. எதற்காக இந்த எதிர்ப்பு .? காணலாம் இந்த செய்தி தொகுப்பில்…

Apr 2, 2024 - 11:16
வராதே… வராதே… ஓட்டு கேட்டு வராதே… அமைச்சருக்கு கருப்பு கொடி…

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்த தொகுதி, குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

 

இங்கு, உப்பாறு அணைக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, உப்பாறு பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

ஆனால், ஒரு முறை கூட உப்பாறு பாசன விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தாததால், தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்பாதை, பனமரத்து பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடியை கட்டியுள்ளனர்.  இந்நிலையில், தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் தேர்பாதை பகுதியில், திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக வருகை தந்தார்.

 

 

அப்போது, உப்பாறு அணைக்கு கடந்த ஓராண்டாக தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள், ஓட்டு கேட்டு ஊருக்குள் வர வேண்டாம் என்ற பேனர் வைத்தும், தங்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியும், வராதே! வராதே! ஓட்டுக் கேட்டு ஊருக்குள்ளே வராதே! என கோஷங்களையும் எழுப்பியதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

 

மேலும், உப்பாறு அணைக்கு உயிர் நீர் கேட்டு போராடும் போது வராதவர்கள், ஓட்டுக் கேட்கவும் வர வேண்டாம் என வலியுறுத்தும் விதமாக, ஃபிளக்ஸ் பேனர்களை கட்டி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தேர்பாதை பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் கைகளில் கருப்புக் கொடியை ஏந்தியபடி முழக்கமிட்ட நிலையில், அங்கு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து, திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக வருகை தந்த அமைச்சர் கயல்விழி தனது காரில் இருந்து இறங்காமல் அப்படியே சென்றுவிட்டார். பிரசார வாகனத்தில் வந்த வேட்பாளர் பிரகாஷ், பொதுமக்களிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, அங்கிருந்து அவசர அவசரமாக பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே, அங்கிருந்த மக்கள் தங்களை தடுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow