விளாத்திகுளம் பூங்காவில் சிறுவன் மர்ம மரணம்
எம்எல்ஏவை பிடிக்காதவர்கள் பூங்கா பராமரிக்கப்படவில்லை. அதனால் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்து விட்டதாக புரளி கிளப்புகிறார்கள்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் இருக்கும் பூங்காவில் விளையாடிய 13 வயது சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவை சேர்ந்த முருகன் மகன் மனோஜ் குமார் (13). விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி மனோஜ் குமார் நண்பர்களுடன் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அமைந்துள்ள "முத்துப்பூங்காவிற்கு" விளையாடச் சென்றுள்ளார்.
அப்போது பூங்காவில் இருந்த மின்விளக்கு கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விளாத்திகுளம் காவல்துறையினர் பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த மற்ற சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை பத்திரமாக பூங்காவில் இருந்து வெளியேறினார்கள். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளாத்திகுளம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததே சிறுவன் மனோஜ் குமாரின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள், "சிறுவன் மரணத்திற்கு மின்சாரம் காரணம் கிடையாது. அங்கிருந்த பாம்பு கடித்ததாக சொல்கிறார்கள். அரசு மருத்துவமனை டாக்டரும் அதையே சொல்கிறார்கள். ஆனால் எம்எல்ஏவை பிடிக்காதவர்கள் பூங்கா பராமரிக்கப்படவில்லை. அதனால் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்து விட்டதாக புரளி கிளப்புகிறார்கள்" என்கிறார்கள்
-எஸ்.அண்ணாதுரை
What's Your Reaction?