புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பஞ்சாயத்து துணைத்தலைவி வீட்டில் கொள்ளை

குடும்பத்துடன் புத்தாண்டு பிரேயருக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரிய வந்தது.

Jan 2, 2024 - 15:06
Jan 2, 2024 - 15:11
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பஞ்சாயத்து துணைத்தலைவி வீட்டில் கொள்ளை

புத்தாண்டு பிரார்த்தனைக்கு சென்ற பஞ்சாயத்து துணைத்தலைவி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகே பொன்னாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை(55)காண்ட்ராக்டர். இவரது மனைவி பெயர் மெர்சி. இவர் இக்கிராம பஞ்சாயத்து துணைத் தலைவியாயிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள், இருவரும் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

ஆங்கில வருட பிறப்பையொட்டி, செல்லத்துரை தனது மனைவி மெர்சியை அழைத்துக்கொண்டு நள்ளிரவு பிரார்த்தனைக்காக பக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்றிருக்கிறார். இரவு 11.45 மணிக்குத் தொடங்கிய பிரார்த்தனை நள்ளிரவு 2.30 மணிக்குத்தான் முடிந்திருக்கிறது. பிரேயர் முடிந்தவுடன் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து பார்த்து திடுக்கிட்டிருக்கிறார்கள். காம்பவுண்டு சுவர் கிரில் கேட் உடைக்கப்பட்டு வீட்டின் முன் கதவும் கடப்பாரையால் உடைக்கப்பட்டிருந்ததே இதற்குக் காரணம். உடனடியாக அவர்கள் வீட்டுக்குள் போய் பார்க்க, அங்கு பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 15 பவுன் நகை, இரண்டரை லட்சம் ரொக்கப் பணம், ரூ.12000 மதிப்புள்ள செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு 8 லட்சம் ஆகும். 

செல்லத்துரை உடனடியாக முன்னீர் பள்ளம் போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்துள்ளனர். வீட்டிலிருந்த தடயங்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. செல்லத்துரை குடும்பத்துடன் புத்தாண்டு பிரேயருக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் கூறுகையில், ”இந்த சம்பவத்தை நடத்தியவர்கள் புதிய கொள்ளையர்கள் போல் தெரிகிறது. வீட்டில் கிடைத்திருக்கும் கைரேகைகள் புதியனவாக இருக்கின்றன. என்றாலும் இப்பகுதி சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow