சென்னையில் மீண்டும் கொடூரம் - ரேட்வீலர் நாய் கடித்து 11 வயது சிறுவன் காயம்

நாய் கடித்தது குறித்து கேட்ட போது அதன் உரிமையாளர் நாய் என்றால் கடிக்கும் என அலட்சியமாக பேசுகின்றனர்.

Jun 21, 2024 - 17:05
சென்னையில் மீண்டும் கொடூரம் - ரேட்வீலர் நாய் கடித்து 11 வயது சிறுவன் காயம்

சென்னை மாங்காட்டில் வீட்டின் முன்பு நின்று இருந்த 11 வயது சிறுவனை ரேட்வீலர் நாய் கடித்ததில் சிறுவன் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 5ஆம் தேதி, சிறுமி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, பூங்காவின் எதிர் வீட்டில் புகழேந்தி என்பவரால் வளர்க்கப்பட்ட 2 நாய்கள் சிறுமியை கடித்து குதறின. இதில், தலை, கைகள், கால்களில் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து, ஜூன் 2ஆம் தேதி சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஜோஷ்வா என்பவரது எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் ஜெரால்ட். இவர் வீட்டின் அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு மதிய உணவுக்காகச் சென்றபொழுது, இவரது வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ராட்வீலர் நாய், சிறுவனை துரத்தி வெறித்தனமாக கடித்தது.

இதனை அடுத்து, சிறுவனின் அலறல் மற்றும் அழுகை குரல் கேட்டு வீட்டில் இருந்த சிறுவனின் தந்தை ராட்வீலர் நாயை விரட்டினார். ஆனாலும், தொடர்ச்சியாக அந்த நாய் சிறுவனை துரத்தி துரத்தி கடித்ததால் அவருக்கு தலை, முதுகு, கழுத்து மற்றும் காது உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கனவே பல்துறை நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படி 23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 23 வகை நாய்களும் மிகவும் ஆக்ரோஷமானவை என்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டன.

இந்நிலையில், சென்னையில் 11 வது சிறுவனை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு, கொழுமணிவாக்கம், சார்லஸ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது 11 வயது மகன் துஜேஷ் பூவிருந்தவல்லியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று இருந்த துஜேஷை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் பாய்ந்து வந்து கடித்தது. இதில் படுகாயம் அடைந்த துஜேஷ் அவரது பெற்றோர் பூவிருந்தவல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், வீட்டின் பக்கத்து வீட்டில் லீலா என்பவர் ராட்வீலர் என்ற  வளர்ப்பு  நாயை வளர்த்து மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் அந்த மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இரவு நாய் உரிமையாளரின் உறவு பெண் நாயை வாக்கிங் கொண்டு வந்த போது அந்த நாயை உரிமையாளர் இழுத்து சென்று தனது மகனை கடித்து விட்டது.

நாய் கடித்தது குறித்து கேட்ட போது அதன் உரிமையாளர் நாய் என்றால் கடிக்கும் என அலட்சியமாக பேசுகின்றனர். இது குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் உடனடியாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே தொடையில் காயமடைந்த சிறுவனுக்கு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow