ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி மீண்டும் ரஷ்ய அதிபரானார் புதின்... நாலாபுறமும் பிரச்னை இருந்தும் வரலாற்று வெற்றி எப்படி..?

200 வருட ரஷ்ய கம்யூனிஸ்ட் ஆட்சி வரலாற்றில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் புதின் !

Mar 18, 2024 - 21:35
ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி மீண்டும் ரஷ்ய அதிபரானார் புதின்...  நாலாபுறமும் பிரச்னை இருந்தும் வரலாற்று வெற்றி எப்படி..?

உக்ரைன் மீதான போர், உலக நாடுகளின் பொருளாதார தடை போன்ற பல சிக்கல்கள் இருந்தும், நடைபெற்று முடிந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் வரலாற்று வெற்றி பெற்று 5வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியான தாக்குதலை துவங்கியது முதல், உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. ஆனால் கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காத ரஷ்யா படிப்படியாக தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் களத்தில் குதித்து, உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டியதுடன், ரஷ்யாவுக்கு கடுமையான எதிர்ப்புகளையும் பதிவு செய்தன. அதைத் தொடர்ந்து பொருளாதார தடை விதித்தும், ஐ.நா சபை எச்சரித்தும் கண்டுகொள்ளாத ரஷ்யா போருக்கு ஆள் சேர்த்துகொண்டிருந்தது. 

உலக நாடுகள் இல்லை, உள்ளூர் மக்களும் இந்த போருக்காக ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக சாடினர். குறிப்பாக ராணுவத்திற்காக கட்டாய ஆள் சேர்ப்பு நடந்தபோது, தங்கள் மகன்களை யுத்த களத்திற்கு அனுப்ப மாட்டோம் என ரஷ்ய தாய்மார்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டது உலகம் முழுவதும் கவனத்தை பெற்றது. இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கடந்த 2 ஆண்டுகளாக பெரிய பிரச்னைகள் இன்றி ரஷ்யாவை புதின் வழிநடத்தினார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் ரஷ்ய அதிபர் புதின் 5-வது முறையாக 87.8% வாக்குகளுடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு முதல் பிரதமர், அதைத் தொடர்ந்து அதிபர் என ரஷ்யாவின் ஆதர்ச ஆட்சியாளராக உள்ள புதின்,  இதற்கு முன் மிகப்பெரிய சிக்கல்களை கண்டதில்லை என்றாலும், கடந்த முறை அவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ள புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களே வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மிக நீண்ட காலமாக ரஷ்யாவில் தேர்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது என்றும், புதின் நீதிமன்றத்தால் தேடப்படும் ஒரு குற்றவாளி, அவருக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் எனவும் சாடியுள்ளார். 

200 வருட ரஷ்ய கம்யூனிஸ்ட் ஆட்சி வரலாற்றில் நீண்டகால தலைவராக இருந்த சோசப் ஸ்டாலினின் சாதனையை, இந்த வெற்றியின் மூலம் அதிபர் புதின் முறியடித்து இருக்கிறார். இத்துடன் யாரும் தடுக்கமுடியாத வகையில் அடுத்த 6 ஆண்டுகளுக்கும் அதிபராக நீடிக்கவுள்ளார். இதையடுத்து பேசிய புதின், நேட்டோ அமைப்பு - ரஷ்யாவுக்கு இடையிலான பிரச்னை 3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow