"சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்புங்கள்" - மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு...
பயண ஆவணங்களைச் சரிபார்க்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து, கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர்களான முருகன், சாந்தன் உள்ளிட்டோர் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாததால் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயைக் கவனிப்பதற்காகத் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக்கோரி சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைக்கு பன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த பிப். 22 ஆம் தேதி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்ததாகவும், ஆனால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அனுப்ப முடியவில்லை. தொடர்ந்து பிப். 27 ஆம் தேதி அனுப்ப முயற்சி செய்தபோது, மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், இதையடுத்து பிப். 28 ஆம் தேதி இதய பாதிப்பு காரணமாக சாந்தன் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இலங்கை தூதரகம் புதிதாகப் பயண அனுமதி வழங்கினால், உடனடியாக சாந்தன் உடலை இலங்கை எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.இதையடுத்து, பயண ஆவணங்களைச் சரிபார்க்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?