ஆண்டிப் பண்டாரம் என்ற வார்த்தை.. திரைப்படங்களில் பயன்படுத்த தடை கோரி வழக்கு.. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Apr 30, 2024 - 17:57
ஆண்டிப் பண்டாரம் என்ற வார்த்தை.. திரைப்படங்களில் பயன்படுத்த தடை கோரி வழக்கு.. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திரைப்படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆண்டிப் பண்டாரம் என்ற சமூகத்தின் பெயரை இழிவாக பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த கலாதேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் "சமீபகாலமாக ஆண்டிப் பண்டாரம் என்ற வார்த்தையை திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதுவும் இழிவுப்படுத்தும் விதமாகவே அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படத்தில் பண்டாரத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தி பாடல் வெளியான நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த வார்த்தை அகற்றப்பட்டு வேறு வார்த்தையுடன் அப்பாடல் வெளியானது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்ட பின்பும், ஆண்டிப் பண்டாரம் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. 

ஆகவே 2003, 2012, 2021 ஆகிய ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் பண்டாரம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும். மேலும் ஆண்டிப் பண்டாரம் என்ற சமூகத்தின் பெயரை யாரும் இழிவாக பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow