மெத்தனால் கிடைத்தது எப்படி? - சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள்

மெத்தனால் விற்பனை வரலாற்றில், சின்னதுரை முழு பணத்தையும் வாங்காமல் முன்பணத்தை பெற்றுக்கொண்டு மெத்தனாலை கொடுத்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Jun 21, 2024 - 15:06
மெத்தனால் கிடைத்தது எப்படி? - சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள்

கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கள்ளச்சாராய விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையில், கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் கிடைத்தது எப்படி என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு வரை 45 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 பேர் இறந்துள்ளதால் உயிரிழப்பு 50 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஜிப்மர் மருத்துமனையில் சிகிச்சை பெறும் 16 பேரில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தவிர மற்ற மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை 7 நபர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சின்னதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் கூறியதாவது: கடந்த 17ஆம் தேதி மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கியுள்ளார். மெத்தனால் அடங்கிய 60 லிட்டர், 4 ட்யூப் மற்றும் 30 லிட்டர், 3 ட்யூப்கள், 100 சிறிய பாக்கெட்டுகளை சின்னத்துரையிடமிருந்து கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் வாங்கியுள்ளார்.

மூலப்பொருட்களை வாங்கிய கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன், முதலில் குடித்து பார்த்து மெத்தனால் கெட்டுப்போய் இருப்பதாக தனது சகோதரர் கோவிந்தராஜ் மற்றும் மெத்தனாலை விற்பனை செய்த சின்னதுரையிடம் கூறியுள்ளார்.

கோவிந்தராஜனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால் அவரது தம்பி தாமோதரனே எப்போதும் சிறிதளவு குடித்து பார்த்து வாங்குவார். அதற்கு சின்னதுரை மெத்தனால் கெட்டுப்போகவில்லை, உயர்ந்த ரக சரக்கு எனக்கூறி, ‘விற்பனை செய்யுங்கள் பார்த்துக் கொள்ளலாம்’ என கோவிந்தராஜிடம் விற்பனை செய்துள்ளார்.

எப்பொழுதும் முழு பணத்தையும் பெற்றுக்கொண்ட பிறகே மெத்தனாலை சின்னதுரை விற்று வந்த நிலையில், 17ஆம் தேதி கெட்டுப்போன மெத்தனாலை கொடுக்கும்போது, முன்பணம் மட்டுமே பெற்றுள்ளார். மெத்தனால் விற்பனை வரலாற்றில், சின்னதுரை முழு பணத்தையும் வாங்காமல் முன்பணத்தை பெற்றுக்கொண்டு மெத்தனாலை கொடுத்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில், சின்னதுரை மெத்தனாலை மாதேஷ் என்பவரிடமிருந்து பெற்றதும், மாதேஷ் ஆந்திராவில் இருந்து கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து மெத்தனாலை வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. சின்னதுரை அளித்த தகவலின் பேரில் சின்னதுரை விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ்கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சின்னதுரை நண்பர்களான மதன் குமார் மற்றும் ஜோசப் ராஜா ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மதன்குமார் கடந்த 2023ஆம் ஆண்டு எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் விற்பனை செய்த வழக்கில் குண்டர் தரப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்தவர் என்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், சின்னதுரையின் மற்றொரு நண்பரான சங்கராபுரத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்பவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரில் தலைமறைவாக இருந்தபோது சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ், கோவிந்தராஜின் மனைவி விஜயா, கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் இவர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை, சின்னதுரைக்கு மெத்தனால் விற்பனை செய்த மாதேஷ் மற்றும் சின்னதுரை நண்பர்களான ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகிய ஏழு நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா ஆகிய மூன்று நபர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை மாதம் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் மாதேஷ் ஆந்திராவில் எந்த நிறுவனத்திடம் இருந்து மெத்தன நாள் வாங்கி உள்ளார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்த மெத்தனால் ட்யூப்களை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow