அனைத்து தொகுதிகளிலும் 'மினி ஸ்டேடியம்'... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்குள் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கப்படும்.

Jun 27, 2024 - 15:30
அனைத்து தொகுதிகளிலும் 'மினி ஸ்டேடியம்'... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்  அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இன்றும் சட்டப்பேரவை கூடியது முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு, அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இதேபோல் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் நிறைவேற்றப்போகும் திட்டங்களை பட்டியலிட்டார். அதன் விவரம் பின்வருமாறு:-

* சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர் / வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும்.

* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* திருவெறும்பூர், மன்னார்குடி, உத்திரமேரூர், உசிலம்பட்டி, மேட்டூர், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூர், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, சேலம்-ஆத்தூர், கும்பகோணம், மேலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்-ஆத்தூர், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ருட்டி மற்றும் இராமநாதபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கங்கள்  அமைக்கப்படும்.

* இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர் அருகில் SDAT பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதியதாக அமைக்கப்படும்.

* மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* SDATயின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கை 2,330ல் இருந்து 2,600 ஆக உயர்த்தப்படும். 

* இந்த விளையாட்டு விடுதிகளில்  பயிற்சி பெறும் மாணவ-மாணவியர்களுக்கான உணவுப்படி நாள் ஒன்றுக்கு ரூ.250ல் இருந்து ரூ. 350 ஆகவும், சீருடை மானியத் தொகை ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆகவும்,
உபகரண மானியத் தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் எனும் STAR அகாடமி உருவாக்கப்படும்.

* தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.28 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* முதலமைச்சர் கோப்பைகள் விளையாட்டுப் போட்டிகளில் கூடுதலாக புதிய விளையாட்டுகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்குள் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow