GOAT: தொண்டர்களுக்கு ஏமாற்றம்... ரசிகர்களுக்கு கொண்டாட்டம்... விஜய்யின் கோட் செகண்ட் சிங்கிள் ரெடி

விஜய்யின் கோட் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jun 21, 2024 - 15:32
GOAT: தொண்டர்களுக்கு ஏமாற்றம்... ரசிகர்களுக்கு கொண்டாட்டம்... விஜய்யின் கோட் செகண்ட் சிங்கிள் ரெடி

சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கோட் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் அப்டேட் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஜூன் 22ம் தேதியான நாளை, விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனிடையே கள்ளக்குறிச்சி அருகே கள்ளச் சாராயம் அருந்தியதில் 52 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து, தவெக தலைவராக அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜய். அதுமட்டுமில்லாமல் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  

விஜய்யின் 50வது பிறந்தநாளை வெறித்தனமாக கொண்டாட காத்திருந்த தவெக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு, இந்த உத்தரவு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் அதே விஜய் தனது ரசிகர்களுக்காக சூப்பரான அப்டேட் கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதாவது தி கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். யுவன் இசையில் சின்ன சின்ன கண்கள் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடல் மெலடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் கோட் கிளிம்ப்ஸ் வீடியோ அல்லது டீசர் ஏதும் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த விஜய், தான் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், தளபதி 50, தி கோட் என்ற ஹேஷ்டேக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல், விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 69வது படம் குறித்தும் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow