கள்ளக்குறிச்சி மரணங்கள்.. மவுனம் கலைத்த திருமாவளவன்.. ஜூன் 24ல் ஆர்பாட்டம்.. அரசுக்கு எதிராக பேசுவாரா?
கள்ளக்குறிச்சி நச்சு சாராய சாவுகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கள்ளச் சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ஜூன் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பல உயிர்கள் போன பின்னர் கருத்து எதுவும் கூறாமல் இருந்த திருமாவளவன் ஒரு வழியாக ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளார். அரசுக்கு எதிராக அவர் குரல் தருவாரா என்று பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக விசிக தலைவர் திருமாவளவனும் நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ''கள்ளக்குறிச்சி நச்சு சாராய சாவுகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும்; தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் ஜூன் 24-ம் தேதி மாலை 3 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பலர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப்பகலில் கள்ளச்சாராயம் விற்பனை ஆகிறது. இது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. மெத்தனால் எளிதாக கிடைக்கும் பொருள் அல்ல, ஆனால் கள்ளச் சந்தையில் விற்பனை ஆகிறது எனவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. பாஜகவும் அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரும் 24ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
What's Your Reaction?