விஷாலும் லைகா நிறுவனமும் மத்தியஸ்தம் செய்துகொள்ளுங்கள்! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் தனது 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்திற்காக பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதையொட்டி நடிகர் விஷாலும், லைகா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஷால் தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிட உள்ளதாகவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
அப்போது விஷால் தரப்பில் லைகா நிறுவனத்திற்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயம், சமரசத்திற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் விஷால் முன்னெடுக்கவில்லை என லைகா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
இது தொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், விஷால் பிலிம் பேக்டரி" பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை தான் செலுத்தி உள்ளதாக விஷால் கூறியுள்ளார்.
மேலும் லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கோரி லைகா நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், ஜி.எஸ்.டி. ஒப்பந்தத்தின் அசல் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி, தான் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடிகர் விஷால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக ஒப்பந்தத்தின் அசல் தங்களிடம் இல்லை எனவும் கூறினார். லைகாவின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டார்.
What's Your Reaction?