ஆபரேசன் தியேட்டரில் அத்துமீறிய டாக்டர் மீது சட்டபூர்வ நடவடிக்கை பாயும்.. மா.சுப்ரமணியன் உறுதி
அறுவை சிகிச்சை அரங்கிற்குள் மருத்துவர் சுப்பையா சண்முகம் உடன் பணிபுரிந்த செவிலியரோடு அத்துமீறியதாக இணையதளங்களிலும், ஊடகங்களிலும் பரவி வருகிறது
ராயப்பேட்டை மருத்துவமனை மருத்துவர் சுப்பையா சண்முகம் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வரும் நிலையில், 1 வார காலத்தில் அதன் தீர்ப்பு வெளியாக உள்ளது. தீர்ப்பு வெளியான பிறகு சட்டபூர்வமாகவும், துறை ரீதியாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி.
புற்றுநோய் நிபுணரான மருத்துவர் சுப்பையா சண்முகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறைத் தலைவராக பணியாற்றியவர். 2017 முதல் 2020 வரை ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசியத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கும், அவர் வசிக்கும் குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசித்துவந்த மூதாட்டிக்கும் இடையே பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மருத்துவர் சுப்பையா சண்முகம், மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அவர் மீது பெண்களைத் துன்புறுத்துதல், கரோனா விதிமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து.. திமுக அரசு பதிவியேற்ற பிறகு, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல, முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சென்று சந்தித்த மருத்துவர் சுப்பையா சண்முகம், கீழப்பாக்கம் புற்றுநோய் பிரிவு துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் டாக்டர் சுப்பையா சண்முகம். ஆபரேஷன் முடிந்து வெளியே வந்த டாக்டர் சுப்பையா சண்முகம், அறுவை சிகிச்சை அறையின் அருகே நர்ஸ்கள் டிரஸ் மாற்றும் ரூமுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவருடன் ஆபரேஷனின்போது உதவி செய்த நர்ஸ் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என புகார் எழுந்துள்ளது. சுப்பையா சண்முகம் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டினை டாக்டர் சுப்பையா மறுக்கிறார்.. இதுகுறித்து அவர் சொல்லும்போது, "இந்த விவகாரம் முழுக்க, முழுக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக சித்தரிக்கப்பட்ட ஒன்று. நான் எந்த தவறும் செய்யவில்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி மருத்துவமனையில் மருத்துவர் சுப்பையா விவகாரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ துறையின் தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகம். இவர் மீது ஏற்கனவே பாலியல் புகார் வந்திருக்கிறது. அந்த வகையில் இது தொடர்பான விசாரணையானது விசாகா கமிட்டியின் மூலம் நடைபெற்று வருகிறது. விசாகா கமிட்டியின் விசாரணையின் தீர்ப்பு என்பது ஒரு வார காலத்தில் வரவுள்ளது.
இந்த நிலையில், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் மருத்துவர் சுப்பையா சண்முகம் உடன் பணிபுரிந்த செவிலியரோடு வரம்பு மீறிய செயல் இணையதளங்களிலும், ஊடகங்களிலும் பரவி வருகிறது. இந்நிலையில் விசாகா கமிட்டியின் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய புற்றுநோய் மருத்துவமனைக்கு அவரை இடமாற்றம் செய்து விட்டோம்.ஒரு வாரத்திற்கு பின் விசாகா கமிட்டியின் தீர்ப்பு வந்தவுடன் சட்டபூர்வமான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும் என கூறினார்.
What's Your Reaction?