கரூர் பரமத்தியில் 111 டிகிரி பாரன்ஹீட்... வெப்ப அலை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் பரமத்தியில் நேற்று (01.05.2024) 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், இன்றும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்திற்கு அஞ்சி மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வெளியே வந்தாலும் நிழல் தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் நேற்று ( மே 1) அதிகமாகவே காணப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ரெண்டசிந்தலா என்ற இடத்தில் 115.16°பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பீகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா ஆகிய இடங்களில் வெப்ப அலை வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், நேற்றைய தினம் (01.05.2024) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 20 இடங்களில் வெயில் சதமடித்ததாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூரில் 110.66° பாரன்ஹீட்டும், ஈரோட்டில் 110.48°பாரன்ஹீட்டும், திருச்சியில் 109.58°பாரன்ஹீட்டும், திருத்தணியில் 108.50°பாரன்ஹீட்டும், சேலம் மற்றும் தருமபுரியில் 106.70°பாரன்ஹீட்டும், மதுரை நகரம், மதுரை விமான, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 106.52°பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி இருக்கிறது.
இதேபோல், நாமக்கலில் 105.80°பாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம் 105.26°பாரன்ஹீட்டும், கடலூரில் 104.36°பாரன்ஹீட்டும், பாளையங்கோட்டையில் 104.0°பாரன்ஹீட்டும், கோவையில் 103.64°பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 102.20°பாரன்ஹீட்டும், நாகையில் 102.20°பாரன்ஹீட்டும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 100.40°பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி, மக்களை வாட்டி வதைத்தாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இன்றைய தினமும் (02.05.2024) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
What's Your Reaction?