பதை பதைக்கும் சாலை விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.. உயிர் தப்பிய பயணிகள்
திருப்பத்தூர் மற்றும் ஈரோட்டில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெஞ்சை பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சு.பள்ளிப்பட்டி என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்து பேருந்து இறங்கிய போது எதிரே வந்த சரக்கு லாரி நேருக்கு நேராக தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சபரி, தேவராஜ், கணேசன், ஜமுனா, நாகராஜ், நவாப், சாகித், சக்கரை, பவானி, தாமோதரன்,வள்ளி, உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சரக்குலாரியும் பயணிகள் பேருந்தும் நேருக்கு நேராக அதி பயங்கரமாக மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி பகுதியில் சாலையில் நடந்து சென்ற அபிநயா என்ற பெண் மீது வேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அபிநயா, பல அடி தூரத்திற்கு பறந்து உருண்டு விழுந்தார். விபத்தில் சிக்கினாலும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த அபிநயா, தலை, தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார் காரை ஓட்டி வந்தது அம்பா சமுத்திரத்தை சேர்ந்தவர் என்றும் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி திடீரென காரின் குறுக்கே வந்ததால் கட்டுபாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






