திராவிடம் தமிழகத்தில் அகற்ற முடியாத சொல்- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அவர்களை பற்றி விஜய் பேசவில்லை.
திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல் என தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலே நமக்கு இலக்கு தீர்மானித்து அதை நோக்கி தவெக தங்கள் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தவெகவின் அடுத்த கட்ட பணிகளாக நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனை கூட்டம் அடுத்தடுத்து பணிகள் தீவிரமடைந்தது. தொடர்ந்து கட்சி கொடி அறிமுகம், கட்சி கொடி பாடல் என அரசியல் பணிகளில் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்தார்.
இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் தவெக சார்பில் மாநாடு நடைபெறும் அறிவிக்கப்பட்டது. மாநாட்டு பணிகளில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டார். இந்த நிலையில் போலீசாரின் அனுமதி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பின்னர் நேற்று விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் மிக பிரமாண்ட முறையில் தவெக மாநாடு நடைபெற்றது. இதில் தவெகவின் கொள்கை மற்றும் செயல் திட்டங்கள் வாசிக்கப்பட்டது. குறிப்பாக தவெக கொள்கை முடிவுகள் என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.
மேலும் தவெக மாநாட்டில் நீட் தேர்வு எதிர்ப்பு, பிளவுவாத அரசியல், திராவிட மாடல், சாதிவாரி கணக்கெடுப்பு என பல்வேறு அரசியல் பிரச்னைகள் குறித்து பேசினார். மேலும் தான் அரசியலுக்கு வந்ததற்காக காரணம் குறித்தும் விளக்கினார். மேலும் திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதாக விஜய் திமுகவை கடுமையாக சாடினார். விஜய்யின் இந்த கருத்து திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை. பாஜகவின் சி டீம். நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. மேலும், பாஜகவை வலுப்படுத்தும் வகையில் அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோளாக உள்ளது. இதனால் நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தி உள்ளது.
கூட்டத்தை காட்டுவதற்காக இந்த மாநாட்டு ஷோவை நடத்தியுள்ளனர். அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் திமுக பற்றி விஜய் பேசி உள்ளார். மேலும், அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அவர்களை பற்றி விஜய் பேசவில்லை. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் கொள்கைக்காக 2 முறை ஆட்சியை இழந்த கட்சி திமுக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக திமுக உள்ளது என தெரிவித்தார்.
What's Your Reaction?