லிப்ட் கொடுத்தது குத்தமாய்யா.. நகை போச்சே.. நாட்றாம்பள்ளியில் 5 பேரை கைது செய்த போலீஸ்
நாட்றம்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் லிப்ட் கேட்பது போல் நாடகமாடி வழிப்பறி செய்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் அருகே உள்ள வாலுர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் 4 நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் பச்சூர் பகுதியில் சீட்டு பணம் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது கார்த்திக்கை வழிமறித்த நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். கார்த்திக்கும் அவருக்கு லிப்ட் கொடுத்த நிலையில் கோமுட்டியூர் என்ற இடத்தில் நிறுத்துமாறு அந்த நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்றதும் கார்த்திக் அவரை இறக்கி விட்ட போது அங்கு மறைந்திருந்த 3 பேருடன் லிப்ட் கேட்டு வந்த நபரும் இணைந்து கார்த்திக்கை மிரட்டினர். அவரிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க செயின், அரை சவரன் மோதிரம், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் வழிப்பறி சம்பவம் தொடர்பாக கோமுட்டியூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞர் மற்றும் 4 சிறுவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். வேறு வழியின்றி நகை, பணத்தை வழிப்பறி செய்ததை 5 பேரும் ஒப்புக்கொண்டனர்.
இதை தொடர்ந்து 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களிடம் 2 சவரன் தங்க நகைகள்,10 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?