உயிரை பறித்த ஆன்லைன் ஆப்.. மிஸ் யூ அம்மா அப்பா.. ஸ்டேட்டஸ் வைத்து விட்டு சென்னையில் ரஜினி ரசிகர் தற்கொலை
ஆன்லைன் லோன் ஆப் மூலமாக கடன் வாங்கிய ரஜினி ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை புதுப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் பெயர் கோபிநாத் என்பதாகும். சென்னை புதுப்பேட்டை நாகப்பன் தெருவை சேர்ந்த மணி தனலட்சுமி தம்பதியரின் மகனாவார். இவருக்கு செந்தில் என்கிற அண்ணனும் இருக்கிறார்.
கோபிநாத் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு எழும்பூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தீவிர ரஜினி ரசிகரான கோபிநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினி பாடலுக்கு அவரை போலவே நடனமாடி பதிவிட்டு அப்பகுதி வாசிகளிடையே பிரபலமானார்.
இந்த நிலையில் இன்று காலை 8மணியளவில் கோபி நாத் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் எழும்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோபி நாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபிநாத்தின் செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, இறப்பதற்கு முன்னதாக கோபிநாத் மிஸ் யூ அம்மா அப்பா நான் போகிறேன், quickcash app இல் கடன் வாங்கியதால் தனது புகைப்படத்தை எல்லாருக்கும் அனுப்பியதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.
கோபிநாத்தின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, எனது மகன் கோபிநாத் ஆன்லைன் லோன் ஆப்பில் கடன் வாங்கிவிட்டு, அந்த பணத்தை செலுத்திய பின்பும் மீண்டும் மீண்டும் தொகை கேட்டு மிரட்டினர். தனது மகனின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் தொடர்பிலி உள்ள அலுவலக ஊழியர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனைப்பார்த்து தனது மானம் போய்விட்டதாக கூறி கோபிநாத் அழுததாகவும் அவரது தாய் தனலட்சுமி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. கோபிநாத் நண்பர்களுடன் வெளியே செல்ல மற்றும் தேவைகளுக்காக நண்பர்கள் மற்றும் ஆன்லைன் லோன் ஆப்பில் கடன்வாங்கி திருப்பி செலுத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக 'குவிக் கேஷ் ஆப்' என்ற செயலி மூலமாக 40 ஆயிரம் ரூபாயை கோபிநாத் கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனை செலுத்திய பின்பும் மீண்டும் மீண்டும் லோன் ஆப் நிறுவனம் வட்டி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததும், இல்லையென்றால் படத்தை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் உள்ள கோபிநாத்தின் காண்டாக்ட்டில் இருப்போருக்கு அனுப்பி விடுவதாக வட மாநில நபர் ஒருவர் மெசேஜ் மற்றும் செல்போன் மூலமாக தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இதனால் கோபிநாத்தின் தாய் தங்க நகையை அடகு வைத்து கடன் செலுத்த கொடுத்துள்ளார். மேலும் தொந்தரவு செய்ததால் கோபிநாத் தனது நண்பர்களிடம் இருந்து கடனாக பெற்றுக் கொடுத்து வந்துள்ளார். 40 ஆயிரம் ரூபாய் கடனுக்காக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கடனாக கோபிநாத் செலுத்தியுள்ளார்.
மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டிய நபர்கள், கோபிநாத்தின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன கோபிநாத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக கோபிநாத்தின் செல்போனை தடவியல் துறைக்கு அனுப்பிய போலீசார், ஆன்லைன் லோன் ஆப்பிலில்ருந்து வந்த எண்ணை வைத்து வட மாநில நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏற்கனவே ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் சிக்கி தமிழகத்தில் பல பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஆன்லைன் லோன் ஆப்புகளை ப்ளே ஸ்டோரில் இருந்து மத்திய அரசு நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் மீண்டும் லோன் ஆப் மூலமாக ஒரு வாலிபர் சென்னையில் உயிரிழந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
What's Your Reaction?