நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்தது ஏன்? அபசகுணமா? சட்டசபையில் விளக்கம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு
நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டத்தின் போது வடக்கயிறு அறுந்து விழுந்தது ஏன் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லையப்பர் கோயிலின் திருத்தேர் வடம் அறுந்தது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, கீழ்பெண்ணத்தூர் எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி, நெல்லையப்பர் கோயிலில் தேர் இழுக்கும்போது கயிறு சரி இல்லை என்று செய்திகள் வந்து உள்ளது, திருவண்ணாமலை கோயிலில் உள்ளது போல் இரும்பு சங்கிலிகள் மூலம் தேர் இழுக்க அரசு நடவடிக்கை எடுக்கமா என அறிய விரும்புகிறேன் என கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களில் மூன்றாவது பெரிய தேராக நெல்லையப்பர் கோயில் தேர் உள்ளது. 28 அடி நீளமும், 28 அடி அகலமும், 80 அடி உயரமும், 450 டன் எடையும் கொண்டதாக அந்த தேர் உள்ளது.
9ஆம் நாள் திருவிழாவான தேர் திருவிழாவின்போது, வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேர் வடத்தை பின்னால் இருந்து நெம்புகோல் தராததன் விளைவாக தேரை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு இழுத்ததால், தேர் வடம் அறுந்தது. அதற்கு மாற்றாக திருச்செந்தூர் தேர் வடத்தை இணைத்து வெற்றிகரமாக நேற்றிரவு 9.30 மணி அளவில் சுவாமிகள் நிலையை அடைந்தனர்.
தேரின் இணைப்பு பகுதியில் இரும்பு சங்கிலி இருக்கும். 450 டன் எடை கொண்ட இந்த நெல்லையப்பர் கோயில் தேரை இழுக்க கயிற்றால் ஆன வடம் பயன்படுத்தப்படுகின்றது. நேற்றைய உற்சவத்தில் தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறையினர் வடம் மற்றும் தேருக்கும் சான்று அளித்ததால்தான் தேர் வீதி உலா வந்தது. எந்த தேர்களுக்கு சங்கலிகள் தேவையோ அதை செய்து தருவோம் என கூறினார்.
What's Your Reaction?