கொளுத்தும் கோடை வெயில்.. சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வருமா.. அதிகாரிகள் சொல்வதென்ன..
சென்னை மக்களின் குடிநீர் ஆதாராமாக இருக்கும் ஏரிகளில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின தலைநகராக விளங்கும் சென்னையில் சுமார் 1.2 கோடி மக்கள் வசிக்கின்றனர். இது தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் ஏழில் ஒரு பங்காகும். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக செம்பரம்பாக்கம், பூண்டி சோழவரம், புழல் மற்றும் தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட ஏரிகள் விளங்குகிறது. இவற்றின் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 7,457 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 1,394 மில்லியன் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 236 கன அடியாகவும் உள்ளது. அதேபோல் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2,808 மில்லியன் கன அடியாக உள்ளது, ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 170 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 214 கன அடியாகவும் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 2,625 மில்லியன் கன அடியாக உள்ளது, ஏரிக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் 156 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தற்போது 216 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால் வினாடிக்கு 8 கன அடி மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 414 மில்லியன் கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 23 கன அடியாகவும் உள்ளது. மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் சுமார் 60 சதவீதம் அளவிற்கு நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூரில் இருக்கும் வீராணம் ஏரியிலிருந்து ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 180 மில்லியன் லிட்டர் நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டுவரக்கூடும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் வீராணம் ஏரியில் 712 மில்லியன் கன அடி நீர் இருந்தது. ஆனால் இந்தாண்டு வீராணம் ஏரி முற்றிலுமாக வற்றி விட்டது.
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் மாதத்திலேயே வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் இதைவிட அதிகமாக இருக்கும் கூறப்படுகிறது. இதனால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதராங்களில் நீர் மட்டம் உயர்வது என்பது கோடை மழையால் மட்டுமே சாத்தியமாகும். இருப்பினும் இந்தாண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நீர் வள மேலாண்மை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
What's Your Reaction?