Tamilnadu : உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா? சென்னைவாசிகள் இதை உடனே செய்யுங்கள்...!
தமிழ்நாடு முழுவதும் 43,052 மையங்களில் முகாம்கள் அமைத்து அரசு ஏற்பாடு!
தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது.
நாட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மாநிலந்தோறும் போலியோ சொட்டு மருந்து அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 3) மாநிலம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் உட்பட 43,052 மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள் போன்ற இடங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசின் அறிவிப்பில், தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டுமருந்து வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை போலியோ வைரஸில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து மையத்தை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தனது 4 வயது மகனுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
What's Your Reaction?