கள்ளச்சாராயம் விற்பவர்கள் விற்கிறார்கள்; குடிப்பவர்கள் குடிக்கிறார்கள் - பீட்டர் அல்போன்ஸ்
கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்வதற்காக நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணையானது துவங்கி இருக்கிறது.
கள்ளச் சாராயம் விற்பவர்கள் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள், அதேபோல் குடிப்பவர்களும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று மாநில சிறுபான்மையினர் துறை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
தென்காசி அருகே உள்ள அகரக்கட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில சிறுபான்மையின துறை ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கள்ளச் சாராய குடித்து ஏராளமானோர் உயிரிழந்திருப்பது மன வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. அரசு உடனடியாக அதிரடியாக நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர், மதுவிலக்கு காவல்துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்று வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்வதற்காக நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணையானது துவங்கி இருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு நீதியரசரின் விசாரணை ஆணையம் துரிதமாக விசாரிக்கும் என நம்புகிறேன்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு கள்ளச் சாராயம் விற்பவர் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார் அதேபோல் குடிப்பவர்களும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் அதில் விஷம் கலக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையும் விசாரணை குழு துரிதமாக விசாரிக்க வேண்டும்.
நாட்டில் போதைப் பொருள் கடத்தல் என்றாலும் குஜராத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. நீட் தேர்வு முறைகேடு என்றாலும் குஜராத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது. வங்கிகளில் மோசடி என்றாலும் குஜராத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தால் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். அவரை எதிர்த்து போட்டியிடும் பாமக வேட்பாளர் வைப்புத் தொகையை இழப்பார்” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?