திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது?.. அண்ணாமலை சரமாரி கேள்வி!

Feb 22, 2024 - 16:54
Feb 22, 2024 - 16:55
திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது?.. அண்ணாமலை சரமாரி கேள்வி!

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக இடஒதுக்கீட்டின்படி பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நியமனங்களுக்குப் பணம் பெறும் எண்ணமிருந்தால், துறையற்ற அமைச்சர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று விமர்சித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராடி வருவதைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னையில் நேற்று (பிப்.22-ம் தேதி) போராட்டம் நடத்திய பார்வை மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு தம்முடைய கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வரும் திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்துவதில் எதற்காகத் தயங்குகிறது என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளர்களுக்கான ரூ.1,000 உதவித் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது முதல், பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்படவே இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

திமுக அரசு யாருக்காக நடக்கிறது என்று கேள்வியும் எழுப்பியுள்ள அண்ணாமலை, பார்வை மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், நியமனங்களுக்காக பணம் பெறும் எண்ணத்தில் காலதாமதப்படுத்தினால், தற்போது துறையற்ற நிலையில் உள்ள அமைச்சர்களின் நிலையை நினைப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow