பஞ்சுமிட்டாய்க்கு தடை.. Rhodamine B என்ன செய்யும்?

நச்சு வண்ணங்கள் நம் உடலில் இருந்து வெளியேற குறைந்தது 45 நாட்களாகும் என்று ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். 

Feb 17, 2024 - 13:24
பஞ்சுமிட்டாய்க்கு தடை.. Rhodamine B என்ன செய்யும்?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பஞ்சுமிட்டாய் என்று சொன்னாலே ஏனோ இனம்புரியா ஓர் உணர்வு தொத்திக்கொள்ளும். பஞ்சுமிட்டாய் சாப்பிடும்போது குழந்தைகளாக நம்மில் சிலர் மாறிவிடுவோம். அப்படி நம் வாழ்க்கையில் நினைவுகளோடு கலந்துள்ள பஞ்சுமிட்டாய், நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு அபாயமாக இன்று மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆய்வில், புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடையும் விதிக்கப்பட்டது. 

இதன் எதிரொலியால் தமிழ்நாட்டிலும் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்திருக்கிறது.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஞ்சுமிட்டாயில்  Rhodamine B என்ற நச்சுப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன் பி (Rhodamine B) என்பது ஒரு செயற்கை நிறமூட்டியாகும். ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு  Rhodamine B பயன்படுத்தப்படுகிறது. இந்த நச்சு வண்ணங்கள் நம் உடலில் இருந்து வெளியேற குறைந்தது 45 நாட்களாகும் என்று ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். 

மேலும், Rhodamine B உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். அதோடு உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. இத்தகைய மிகவும் அபாயகரமான நச்சுபொருளான Rhodamine B உள்ளிட்ட ரசாயனங்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ள உணவுப் பாதுகாப்புத்துறை, திருமண விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பஞ்சுமிட்டாய் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.எனவே, கலர் கலராக பஞ்சுமிட்டாய் வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடித்தாலும் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow