பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி... புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு...

புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பை கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Feb 14, 2024 - 11:44
Feb 14, 2024 - 12:22
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி... புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.தொடர்ந்து பிரதமர் இம்ரான் கான் மீது எழுந்த ஊழல் புகார்களால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். பின்னர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். 

இவ்வாறு பல்வேறு சிக்கல்களுக்கு உள்ள பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 266 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் தேசிய அவைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதில் இம்ரான் கானின் PTI கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அக்கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 

முன்னாள் பிரதர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும், MQM கட்சி 17 இடங்களிலும், PML(Q) கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சியமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில், பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் யார் ஆட்சியமைப்பது என்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். ஆனால் பிரதமர்  யார் என்பது குறித்து விவாதம் எழுந்த சூழலில் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என அறிவித்தனர். அமைச்சரவையில் இடம்பெறப் போவதில்லை எனவும் வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்தார். இதனை கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இதனை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow