ஜவ்வாது மலைப்பாதையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்
செய்முறை தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் மாணவர்கள் பிக்கப் வேனில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையை சுற்றியுள்ள கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லாததால், ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
கிழக்கு தொடர்ச்சி மலையில், கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத் தொடர் ஜவ்வாது மலை. இந்த ஜவ்வாது மலைத் தொடர்கள் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 262சதுர கி.மீ பரப்பளவு மற்றும் 250கி.மீ சுற்றளவு கொண்டது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைத் தொடரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் உள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் இம்மலைத் தொடரை சுற்றி பல கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள கிராமங்களில் பல பகுதிகளுக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக புதுர்நாடு என்ற பகுதியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவிகள் பள்ளி, கல்லூரி சென்று வருகின்றனர். சுமார் 17 கிலோ மீட்டர் பயணித்து கீழூரில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிக்கு சென்று வருகின்றனர். தற்போது 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்கள் நாள்தோறும் 17 கிலோ மீட்டர் மலைப்பாதையில் ஆபத்தான முறையில் தான் பயணித்து வருகின்றனர். செய்முறை தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் மாணவர்கள் பிக்கப் வேனில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர்.
இதேப் போல கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செம்பரை பகுதியில் உள்ள கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்கப்வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் மாணவர்கள் இதுபோன்ற ஆபத்தான பயணத்தை தவிர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
What's Your Reaction?