நாயகன் மீண்டும் வரான்... நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பைக்கு முதல் வெற்றி...
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
17-வது ஐபிஎல் தொடர் நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி பேட்டிங் செய்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். 80 ரன்களை நெருங்கியபோது ரோஹித் ஷர்மா டெல்லி வீரர் அக்ஷர் படேலின் பந்துவீச்சில் போல்ட் ஆகி விக்கெட்டை இழந்தார். அரை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 49 ரன்களுடன் வெளியேறினார் ரோஹித் சர்மா.
இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 2வது பந்திலேயே டக் அவுட் ஆனார். இஷான் கிஷன் 42 ரன்களிலும், திலக் வர்மா 6 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்ததாக ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்துச் சென்றனர். விறுவிறுப்பான ஆட்டத்தில் டிம் டேவிட் 45 ரன்களும் ஷெப்பர்ட் 39 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 234 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் அக்ஷர் படேல் மற்றும் நோர்க்கியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 235 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில் வார்னர் 10 ரன்களிலேயே விக்கெட்டை இழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து அபிஷேக் போரலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த பிரித்வி ஷா 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து அபிஷேக் மற்றும் ரிஷப் பண்ட், லலித் யாதவ், குமார் குஷாக்ரா ஆகியோர் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த ஸ்டப்ஸ் 7 சிக்சர் 3 பவுண்டரிகள் என பந்துகளைப் பறக்கவிட்டு 71 ரன்களை குவித்தார்.
ஆனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய மும்பை அணி, டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்றைய போட்டியுடன், ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் ரோகித் ஷர்மா 1,000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?