அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்
சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.
விக்னேஷ் தாயாருக்கு ஒரு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற கோபத்தில் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விக்னேஷ் பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மருத்துவருக்கு கழுத்து, காதுக்கு பின்புறம், நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவருக்கு கத்திக்குத்தியால் குத்தப்பட்டுள்ளார்.உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 மணி நேரத்திற்கு பிறகு தான் மருத்துவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன.அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?