தமிழக மீனவர்களை தாக்கி விரட்டிடித்த இலங்கை கடற்படை

மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் குழும  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dec 9, 2023 - 14:39
Dec 9, 2023 - 16:22
தமிழக மீனவர்களை தாக்கி விரட்டிடித்த இலங்கை கடற்படை

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததோடு, நண்டு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இலங்கை கடற்படையினர் தங்களது அராஜகங்களை ஆரம்பித்துவிட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை குறி வைத்து இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ஈடுபடுவது மற்றும் துப்பாக்கில் சுட்டுக்கொல்வது போன்ற கொடூர சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறி மீனவர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திவந்தது. இதனிடையே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்களை குறைத்துக்கொண்டனர்.ஆனால் இலங்கை மீனவர்கள் கடற்கொள்ளையர்களாக மாறி இலங்கை கடற்படையினர் போலவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு பணம், வலை, மீன்கள், செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவந்தனர்.இந்நிலையில் பல மாதம் கழித்து மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச்சேர்ந்தவர் பக்கிரிசாமி. மீனவரான இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் கோடியக்கரை கடற்கரையிலிருந்து சக்தி, ராஜ்குமார் ஆகிய இரு மீனவர்களுடன் நேற்று முன் தினம் மதியம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.நேற்று அதிகாலை இவர்கள் மூவரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கே மற்றொரு படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகை வழிமறித்து 3 மீனவர்களையும் கம்பு மற்றும் கயிறால் தாக்கியிருக்கின்றனர்.

மேலும் மீனவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன், டார்ச் லைட், 15 கிலோ வலைகள் மற்றும் படகிலிருந்த நண்டுகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டதோடு அவர்களை விரட்டியடித்துள்ளனர். அத்துடன் மீனவர்களின் மீன் பிடி வலைகளை அவர்கள் கண்ணெதிரிலேயே வெட்டி கடலில் வீசியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் அச்சமடைந்த மீனவர்கள் நேற்று காலை கோடியக்கரைக்கு வந்து கடலில் நடைபெற்ற சம்பவத்தை தங்கள் உறவினர்களிடம் விவரித்தனர்.

இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கி சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள், நண்டுகள் ஆகியவற்றை பறித்துசென்றதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர்.அதன்பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் குழும  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow