கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 16 ஆண்டுகளுக்கு பிறகு கைது

அண்டா சுரேஷ் மீது புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

Dec 9, 2023 - 14:33
Dec 9, 2023 - 16:21
கொலை முயற்சி வழக்கில்  தேடப்பட்டு வந்தவர் 16 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கொள்ளிடம் அருகே கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 16 ஆண்டுகளுக்கு பிறகு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி கிராமத்தைச்சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவரின் மகன் அண்டா சுரேஷ் (40).இவர் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் கடந்த 2007ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் அப்பகுதியைச்சேர்ந்த அர்ஜுனன், பாலு ஆகிய இருவரை கத்தியால் குத்தினார்.இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்டா சுரேஷை தேடி வந்தனர்.

இது சம்பந்தமான வழக்கு சீர்காழி நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.இந்த வழக்கில் அண்டா சுரேஷுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியும், இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்து வந்தார்.இதனையடுத்து நீதிமன்றம் இவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலயில் அண்டா சுரேஷ் மயிலாடுதுறை அருகே ஆறுபாதி கிராமத்தில் இருப்பதையறிந்த தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சீர்காழி கிளைச்சிறையில் அடைத்தனர்.

போலீசாரிடம் பேசினோம். “கடந்த 2003ம் வருடம் மாதானம் கிராமத்தில் இவருக்கும் அப்பகுதியைச்சேர்ந்த மற்றொருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அண்டா சுரேஷ் மீது புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஆச்சாள்புரத்திலிருந்து மகேந்திரபள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பாமக மாவட்ட துணைச்செயலாளர் சிவபாலனை கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்த வழக்கும் அண்டா சுரேஷின் மீது நிலுவையில் உள்ளது.இந்த நிலையில்தான் அவன் கைதாகியிருக்கிறான்.” என்றனர்.

கடந்த 2007 லிருந்து 16 வருடம் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வந்த அண்டா சுரேஷ் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow