பெரியார் ஒழிக என பாஜகவினர் கோஷம்.. பஞ்சாயத்தை பைசல் செய்த போலீசார்..
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாஜகவினருக்கு, அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்ட மேதை அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனிடையே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவினர் சென்றுள்ளனர். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், "மதவாத சக்திகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது" என கோஷம் எழுப்பினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பெரியார் ஒழிக என்று கோஷங்கள் எழுப்பியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடம் சென்ற போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். முதலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க, அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், பாஜகவினரை மாலை அணிவிக்க விடாத வண்ணம் அம்பேத்கர் சிலை அருகே நின்று கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த பாஜகவினர், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாஜகவினரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதித்தனர். அம்பேத்கர் சிலை முன் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் அங்கு சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?